ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: பெற்றோர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
கனடாவின் 23வது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடே அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றபின் அகதிகள் தொடர்பான விடயம், சிரியா போர் மற்றும் நாட்டின் பொருளாதர நிலை ஆகியவை தொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் ட்ரூடே தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பில் மொர்னியூ (Bil Morneau) இதனை தாக்கல் செய்தார்.
கனடிய பொருளாதாரம் பெரும் சரிவில் உள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதனை தூக்கி நிறுத்தும் ஒன்றாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய மற்றும் கீழ் நிலையில் உள்ள கனெடிய மக்களின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் குழந்தைகளுக்கான திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடைய அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த திட்டம் பயனளிக்கும்.
இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 400 டொலர் வரை கனெடிய குடும்பத்தினர் பெறலாம். எனினும் ஆண்டு வருமானம் 30 ஆயிரம் டொலர்களை தாண்டினால் திட்டத்தின் பயன் அளவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 25 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு வாழிடம் வழங்க கனடா முடிவு செய்தது. இந்த பட்ஜெட்டின் மூலம் மேலும் 10 ஆயிரம் அகதிகளுக்கு வசிப்பிடம் வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில் சுமார் 30 பில்லியன் டொலர் அளவிக்கு இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை உள்ளது குறிப்பிடத்தக்கது.