நபர் மீது வாகனம் ஏற்றி கொன்றது யார்? தகவல் கொடுப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் (வீடியோ இணைப்பு)
ஒட்டாவா நகரை சேர்ந்த மைக்கேல் மோர்லாங்(30) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி அதிகாலை 5 மணியளவில் வெளியே புறப்பட்டுள்ளார்.
மறுநாள்(ஆகஸ்ட் 12ம் திகதி) மைக்கேலின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 5.30 மணியளவில் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில், ‘சாலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், அவரிடம் எந்த அசைவும் இல்லை’ என தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, சாலை ஓரமாக மைக்கேல் ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.
அப்பகுதியை சோதனை செய்தபோது மைக்கேல் மீது வாகனம் மோதி விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக விசாரணையை தீவிரப்படுத்தியும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று ஒட்டாவா நகர பொலிசார் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘விபத்தில் உயிரிழந்த மைக்கேலின் பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக பெரும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மைக்கேல் மீது மோதி கொன்றுவிட்டு அந்த குற்றவாளி எங்கோ ஒரு இடத்தில் வசித்து வருகிறான்.
இதுவரை 100 துப்புகள் கிடைத்தும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, குற்றவாளி குறித்து பொலிசாருக்கு தகவல் தரும் நபருக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.