கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை விசைப்படகுகள் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை;...

  தினத்தந்தி
கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை விசைப்படகுகள் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை;...

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை வருகிற 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மீன் இனப்பெருக்க காலம்

ஆழ்கடலில் மீன்கள் ஏப்ரல், மே மாதங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனபெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த நாட்களில் ஆழ்கடலில் விசை படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கும் போது மீன் இனபெருக்கம் பாதிக்கப்பட்டு மீன் இனமே அழியும் நிலை உருவாகும்.

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீனவர்கள் ஆழ்கடலில் விசைபடகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

கிழக்கு கடற்கரை பகுதி

இந்த காலங்களில் தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை விசைபடகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லமுடியாது. இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், திருவள்ளூர் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகள் இந்த 45 நாட்களும் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும்.

மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு ஏற்றி அதை பழுது பார்த்து, வர்ணம் பூசுவது போன்ற பராமரிப்பு பணிகளிலும் ஈடுபடுவார்கள். இந்த தடை காலத்தில் கட்டுமரம் மற்றும் வள்ளங்கள் மூலம் மீன்பிடிக்க தடை இல்லை என்பதால் இதன் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்கலாம். விசை படகுகளுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்க படுவதால் ஆழ்கடலில் கிடைக்கும் விலை உயர்ந்த மீன்களான நெய் மீன், வஞ்சிரம், சீலா, கனவாய், பாறை போன்ற மீன்கள் வரத்து குறைந்து விடும். இதனால் இந்த மீன்களின் விலையும் உயரும். மேலும் தடை காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும்.

மூலக்கதை