வாழ்த்துகள், வாழ்த்துக்கள்: எது சரி?
ஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன.. நல் வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.
ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார்.. இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.
இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா, வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?
இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? (பசு , பந்து போன்றவை). இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
நெடில் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?
இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.
1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
உதாரணம்.. மாடு , ஆடு …. இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )
2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
வாக்கு – வாக்குகள் (வாக்குக்கள் அன்று)
கணக்கு – கணக்குகள்
நாக்கு – நாக்குகள்
வாத்து- வாத்துகள்
வாழ்த்து – வாழ்த்துகள் (வாழ்த்துக்கள் என்பது தவறு)
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.
தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்
அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்
சரியா?
வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களை நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.