47. சுதந்திரத்தை அடைகாத்த கவிப்பறவை

  தினத்தந்தி
47. சுதந்திரத்தை அடைகாத்த கவிப்பறவை

ட்டயபுரம்...    

இந்த எட்டயபுரத்தின் இளைத்த தெரு ஒன்றில்தான் இந்தப்பிஞ்சுச்சூரியன் பிறந்தது. பிறந்தபோது அந்தப்பிஞ்சும் அழுதுகொண்டுதான் பிறந்தது. அது அழுதது பாலுக்கு அல்ல... பாழ்பட்டுக்கிடந்த பாரததேசத்தின் சுதந்திரத்திற்கு. சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்டான். பல்கலைக் கழகம் போகாமலேயே பதினோறாவது வயதில் ‘பாரதி’ என்ற பட்டம் பெற்றான்.

பாரதியின் வாழ்க்கை என்பது இருண்டு கிடந்த இலக்கிய வீதியில் ஒரு சூரியன் நடத்திய சுற்றுலா. கூட்டுக்குள் கிடந்து துடித்த தேசப்பறவைக்காகக் குரல் கொடுத்த பாட்டுப் பறவை. அவன் கண்கள் என்னும் தீப்பந்தத்தில் விடுதலை வேள்வி நடத்திய அக்னிக்குஞ்சு. எளிமை கண்டு இறங்கிய ஏந்தல். சிறுமை கண்டு சீறிய சிறுத்தை.

அவனது காலத்தில் எழுதுகோல் பலரின் கைகளில் மயிலிறகாய் இருந்தது. பாரதியின் கைகளில் மட்டும்தான் அது துப்பாக்கி முனையாகி எதிரிகளைத் துளைத்தது. அவன் பேனா மகுடம் கழற்றிய போதெல்லாம் ஆங்கிலேயரின் கிரீடம் ஆட்டம் கண்டது. அவனது தாய் லட்சுமியம்மாள் பிரசவித்தபோது ஒரே நேரத்தில் இரட்டைப் பிரசவம். ஒன்று பாரதி மற்றொன்று புதிய தமிழ்.

தங்கமணி மகுடங்களைத் தமிழுக்குத் தந்தான். ஒரு சாதாரண தலைப்பாகையை அவன் தலையில் கட்டிக்கொண்டான். அந்த தலைப்பாகை அழகை தரிசிக்கத்தான் அவனது மீசை கூட மேலே நிமிர்ந்து பார்த்தது. அந்த முண்டாசுக் கவிஞன்தான் முடங்கிக்கிடந்த தமிழ்ச்சொற்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சியவன்.

அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் இருந்த இலக்கியத்தை ஏழைகளுக்கு எடுத்துப்பரிமாறியவன். பனை ஓலைகளில் படுத்துக்கிடந்த எழுத்துக்களை பள்ளி எழுச்சி பாடி எழுச்சிபெறச் செய்தவன். காகிதங்களையெல்லாம் ஆயுதங்களாக்கிய கவி நெருப்பு. சுதந்திரத்தை அடைகாத்த கவிப்பறவை.

அந்தக்கவிப்பறவை சிறகு விரித்து நடந்தால் தெருவின் இருமருங்கும் கைத்தாமரைகள் குவியும். காரணம் அவன் கவிராஜன் அல்லவா!. அவன் கவிராஜன்தான் ஆனால், வறுமை ராஜ்ஜியத்தின் ஆஸ்தானக்கவிஞன். அவன் வீட்டு அடுப்பில் சில நேரம் நெருப்பில்லை என்றாலும் நெஞ்சில் மட்டும் விடுதலை என்ற எரிமலை நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருந்தது.

வெள்ளை யானைகளோடு போராடிய போதெல்லாம் அவன் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் திருவல்லிக்கேணியில் ஒரு கருப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். அவன் மூச்சடங்கியபோது வயது முப்பத்து ஒன்பது.

அவன்தான் ‘நமக்குத்தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற கம்பீரமான கவிப்பிரகடனத்தோடு தன் லட்சியப் பயணத்தைத் தொடங்கியவன்.

சொல்புதிது, சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத  கவிதைகளை எழுதியவன். அந்தக் கந்தகச் சொற்களின் கவிநெருப்பில் தமிழகமே தீப்பற்றி எரிந்தது. அந்தக்கவிப்பறவையின் கவி நெருப்புதான் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. ஆனந்த சுதந்திரத்தை அடைகாத்த கவிப்பறவைதான் தேசியகவி, பெருங்கவி, மகாகவி, உலக மகாகவி என்றெல்லாம் போற்றப்படுகிறான். இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த மகாகவி பாரதியின் இன்பம் தரும் இலக்கியச்சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகிறது.

பாரதியின் எழுத்துப்பின்புலம்

மகாகவி பாரதியின் தனிப்பட்ட வாழ்க்கை ரணங்களின் பிறப்பிடமாகவே காட்சியளித்தது. தந்தை சின்னச்சாமி ஐயர் இறந்த பிறகு எதிர்கொண்ட வறுமை, பசி, பட்டினி இவையெல்லாம் பாரதிக்கு அன்றாட நிகழ்வாய் மாறிப்போனது.

சொந்தக் குலத்தினரான உறவினர் ஒதுக்கி வைத்தனர். வெடிப்புறப்பேசியதால் நண்பர்கள் சிலரைத்தவிரப் பலரும் அவனைவிட்டு விலகியே இருந்தனர்.

‘நாளொன்று போவதற்கு நான் பட்ட பாடனைத்தும் தாளம்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?’ என்று குயில் பாட்டிற்காக எழுதினாலும் அவனது சொந்த வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது. இந்த நிலையிலும் ஆங்கில அரசாங்கம் பாரதியை மிரட்டுவதையே தொழிலாகக் கொண்டிருந்தது. காசி, கடையம், புதுச்சேரி என்று எங்குசென்றாலும் ரகசியமாகக் கண்காணித்துக்கொண்டே இருந்தது.

பாரதி ஒரு குடும்பத்தலைவன் என்கிற முறையில் ஒரு சராசரியான நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை வசதிகளைக் கூட தன் மனைவி செல்லம்மாவுக்காக செய்து கொடுக்க முடியவில்லை. இத்தகைய பின்புலத்தில் தான் எழுத்துப்பணி சகல கலைநுட்பங்களோடும் அரங்கேறியது.

காணி நிலத்தில் மாளிகை கட்டிய கவிஞன்


பாலஸ்தீன நாட்டுப் போராளி ஒருவன் ஒரு கையில் கவிதையும் மற்றொரு கையில் துப்பாக்கியும் ஏந்தி நாட்டின் விடுதலைக்கும் மனித உரிமைக்காகவும் போராடுகிறான். அப்போராளியிடம் ‘கவிதையை ஏந்த என்ன காரணம்’ என்று கேட்கின்றனர். அப்போது அவன் கூறினானாம் ‘என்னைப் போராட வைத்தது கவிதை, என் உரிமையை உணர வைத்ததும் கவிதை’ என்று.

பல மொழிகளில் புலமை பெற்றிருந்த பாரதி அதை உணர்ந்துதான் விடுதலைப் போர்க்களத்தில்,

‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’.


என்று கவிதையைப்பாடி ஆவேசக் கூத்தாடினான்.

அந்த அக்னிக்கவிதைகள் தான் உலக மகாகவி என்று அவனை மாற்றி உச்சிதனை முகர்ந்து பாராட்டுப் பெறவைத்திருக்கிறது. பாரதி உலக மகாகவியா! என்று நமக்கே  சிலநேரங்களில் சந்தேகம் வரலாம். சந்தேகமே வேண்டாம். பாரதி உலக மகாகவிதான்.

எந்தக்கவிஞனுடைய படைப்புகள் பெரும்பாலானவை எப்பொழுது படித்தாலும் சுவை தரக்கூடுமோ? அந்தக்கவிஞனே உலக மகாகவி.

எந்தக் கவிஞன் தன் இனம், மொழி, நாடு என்று எல்லைகளைக் கடந்து தன் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றானோ அவனே உலக மகாகவி.

எந்தக்கவிஞனுடைய படைப்புகள் தன் நாட்டினரால் மட்டுமின்றி பிறராலும் மதிக்கப் படுகின்றனவோ அந்தக்கவிஞனே உலக மகாகவி.

இப்படி ஒவ்வொன்றையும்  ஒப்பிடுகின்ற போது பாரதியும் உலக மகாகவி தான் என்று எப்போதும் உரத்துச்சொல்லலாம்.

இந்த உலக மகாகவிஞன் தான் அன்று  பராசக்தியிடம், ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று கேட்கிறான். கேட்டுவிட்டு, ‘அந்தக்காணி நிலத்திடையே ஓர் மாளிகையும் கட்டித்தரவேண்டும்’ என்கிறான். அத்துடன் ‘அங்கு இருக்கும் கிணற்றின் அருகே பத்துப், பன்னிரென்று தென்னை மரங்களும் வேண்டும்’ என்கிறான். தென்னை மரங்களுக்கிடையே நிலவின் ஒளி படரவேண்டும். குயிலின் இனிய ஓசை காற்றில் கலந்து வந்து என் காதில் விழவேண்டும். இனியதென்றல் காற்று மேனியை வருட வேண்டும் என்று  கேட்கின்றான். இத்தனையும் கேட்டுவிட்டு கடைசியாக,

‘பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு
பத்தினிப்பெண் வேணும் – எங்கள்
கூட்டுக்களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் – அந்தக்
காற்று வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் – என்றன்
பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்’.


என்று வரமாகக் கேட்கிறான்.

இவன்தான் பாரதி. உலக மகாகவி பாரதி.

ஒரு கவிதை படைப்புக்கான சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதையே பாரதியின் இந்தப் பாடல் விளக்குகின்றது. அப்படிப் படைக்கும் கவிதைப்படைப்பு சமூகத்தின் மேன்மைக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உயர்ந்த படைப்பு. அப்படிப்படைப்பவனே உயர்ந்த கவிஞன். கவிதைச் சுவைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டுக்கு எங்கே போவது.

கற்பனை வளம் புலமைச்செறிவு, பொருள் நுட்பம், உண்மையில் நாட்டம், தன் அனுபவச் செறிவுக்கு படிப்பவரை இழுத்துச்செல்லும் உத்திகள். இவை அத்தனையும் பாரதியின் கவிதைகளில் அமைந்திருப்பதைச் சுவைத்து மகிழலாம். இதுபோல் கதை, கட்டுரை, வசன கவிதை, குறுங்காவியம் போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தனித்ததொரு அடையாளத்தைப் பதித்திருப்பதைக் காணமுடிகிறது.

புதிய ஆத்திசூடி

ஒவ்வொரு இலக்கியமும் ஓர் இனிய அனுபவத்தில்தான் பிறக்கின்றன. அந்த வகையில் மகாகவி பாரதியின் ஆத்தி சூடியும் அடங்கும். பாரதி சென்னை தம்புசெட்டித் தெருவில் உள்ள முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மிகக் குறுகிய காலம் பணிபுரிந்தார். அப்போது ஒரு நாள் மாலையில் பள்ளிப்பணி முடிந்து அருகில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச்சென்று வழிபாடு செய்துவிட்டு தெருவிலே நடந்துவந்து கொண்டிருந்தார். அங்கே ஒரு திண்ணை ஒன்றில் ஒரு வயதான பெரியவர் தனது பேரப்பிள்ளைக்கு ஒளவையாரின் ஆத்திசூடி பாடல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். சிறுவன் படிக்க மறுத்துக்கொண்டிருந்தான். தாத்தா வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் ஓங்கி அடித்து ‘அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இளமையில் கல்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறுவன் அழுதுகொண்டே ‘சொல்ல முடியாது போ’ என்று கண்களைக் கசக்கினான்.

பாரதியார் இந்தக் காட்சியைப் பார்க்கிறார். பெரியவர் பையனை மீண்டும் அடித்தபோது பாரதிக்குக் கோபம் கொப்பளித்தது. ‘ரெளத்திரம் பழகு’ என்று பாடிய வரல்லவா? ‘ஏன் ஓய் குழந்தையை அடிக்கிறீர். இளமையில் கல், முதுமையில் மண்’ என்று திட்டிக்கொண்டே பெரியவரின் தலையில் ஒரு குட்டு குட்டிவிட்டு காற்றாய்ப் பறந்தார்.

இப்படித்தான் தமிழுக்குப் புதிய ஆத்திசூடி பிறந்திருக்கிறது. பாரதியின் இந்த புதிய ஆத்திசூடி புதுமைகள் நிறைந்த கருத்துப் பெட்டகம்.

இதன் காப்புப்பாடல்,

‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழு வெண் மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே!  அதனியல் ஒளியுறு மறிவோம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம்’


என்று தொடங்குகிறார்.

இதில் சைவம், வைணவம், இஸ்லாம், கிருத்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு அனைத்துச் சமயங்களும் குறிப்பிடும் பரம்பொருள் ஒன்றேதான். அந்தப் பரம்பொருளில் ஒளிர்வது அறிவு. அந்த அறிவு நிலை கண்டவருக்கு அல்லல் இல்லை. எனவே அத்தகைய பரம்பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் என்கிறார்.

பாரதியின் புதிய ஆத்திசூடி ஒற்றைவரிக் கவிதைகள் தான். இவை ஒவ்வொன்றும் இளையதலைமுறையினருக்கு எழுச்சியூட்டக்கூடியவை. உள்ளத்தில் ஒளிபாய்ச்சக்கூடிய உன்னத வரிகள்.

‘அச்சம்தவிர்’, ‘ஆண்மை தவறேல்’, ‘இளைத்தல் இகழ்ச்சி’, ‘ஈகைத்திறன்’, ‘உடலினை உறுதிசெய்’, ‘ஊண்மிக விரும்பு’, ‘எண்ணுவது உயர்வு’, ‘ஏறுபோல் நட’, ‘ஐம்பொறி ஆட்சிகொள்’, ‘ஒற்றுமை வலிமையாம்’, ‘ஓய்தல் ஒழி’, ‘ஒளடதம் குறை’ என்று அகர வரிசையில் தொடங்குகின்றார்.

இதில் ‘ஒளடதம்’ என்றால் மருந்து. ஒளடதம் குறை என்றால் மருந்துகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொருளாகும். மனித வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியம் அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நல்ல உணவும், நல்ல தண்ணீரும், காற்றும், உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் தேவை. சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகளுக்கெல்லாம் கண்ட கண்ட மருந்துகளைச் சாப்பிடுவது நல்லதல்ல என்ற கருத்தினைத்தான் இந்த ஆத்திசூடி விளக்குகின்றது.

புதிய ஆத்திசூடியின் இறுதியில் ‘வெளவுதல் நீக்கு’ என்று முடிக்கிறார். ‘வெளவுதல்’ என்றால் ‘கைப்பற்றுதல், கவ்வுதல், அபகரித்தல்’ என்று பொருள். நமக்குச் சம்பந்தமில்லாதவற்றை திருட்டுத்தனமாகவோ, வன்முறைகளிலோ, சூழ்ச்சிகளிலோ கைப்பற்றுவது தவறானதாகும் என்கிறார்.

இப்படி மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி வரிகள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் வசீகர வரிகளாகத் திகழ்கின்றன. புதிய தலைமுறையான குழந்தைகளும், இளைஞர்களும் இந்த வைர வரிகளை இதயத்தில் பதித்து நடந்தால் வையத்தலைமை கொள்ளலாம். அதனால் வாழ்க்கை இன்பமாகும். அந்த இன்பம் இலக்கியம் தரும் இன்பமாக இருக்கட்டும்.

(தொடரும்)

மூலக்கதை